உங்களுக்குப் பிடித்த இலக்கியம்?அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இலக்கை இயம்புவன இலக்கியங்கள்!

இலக்கியங்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச்சென்ற விலைமதிப்பிடமுடியாத சொத்து!

இலக்கியங்கள் அனுபவக் குவியல்கள்!

இலக்கியங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளன!

“கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்“ என்று ஒரு முதுமொழி உண்டு.
கண்ணில் காணும் நூல்களையெல்லாம் கற்றவன் பண்டிதனாவன் என்பதல்ல இதன் பொருள்.

“நல்ல நூல்களைக் கண்டு, அதைக் கற்றவனே பண்டிதனாவான்“
என்பது இதன் பொருளாகும்.

தமிழ் இலக்கியப்பரப்பில் சங்ககாலம் தொடங்கி இன்றைய காலம் வரை நிறைய இலக்கியங்கள் உண்டு.

நாள்தோறும் தமிழ் இலக்கியங்களுடனேயே உறவாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே நான் பெற்ற பெரும் செல்வம் என்ற பெருமிதம் எனக்கு என்றுமே உண்டு.

வாழ்வில் வெற்றிபெற்ற பலரும்
வாழ்வில் உயர்ந்தவர்களையோ
உயர்ந்த இலக்கியங்களையோ தம் வாழ்வின் முன் மாதிரியாகக் கொண்டமை நாம் உற்றுநோக்கவேண்டியதாக அமைகிறது.

எனக்குத் தெரிந்து..
திருக்குறள்
சிலம்பு
கம்பராமாணம்
ஆகிய தமிழ் இலக்கியச் செல்வங்கள் தரும் கொள்கைகளைத் தம் வாழ்வின் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டவர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன்.

எனக்குப் பிடித்த இலக்கியம்..

எந்தப் பொருள் குறித்தும் வள்ளுவர் பேசியிருக்கிறாரே..
அதுவும் இவ்வளவு சுருக்கமாக..

என்று திருக்குறளைப் போன்ற ஒரு இலக்கியமே எங்கும் கிடையாது என்ற எண்ணம் எனக்கு சங்கஇலக்கியம் படிக்கும் முன்பாக இருந்தது.
சங்க இலக்கியம் படித்த பின்னர் திருக்குறளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது சங்க இலக்கியம் என்பதை உணர்ந்தேன்.
என் வேர்களைத்தேடி என்னும்வலைப்பக்கத்தில் சங்கஇலக்கியத்தையே அதிகமாக எழுதிவருகிறேன்.

எழுதி வருகிறேன் என்று சொல்வதைவிட
கற்றுவருகிறேன்...
சுவைத்துவருகிறேன்..
போற்றி வருகிறேன் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

என் வாழ்வின் இன்பத்தின் போதும், துன்பத்தின் போதும்
திருக்குறளும், சங்க இலக்கியமும் என்னோடு துணை வந்திருக்கின்றன.

அருகே வந்து தன்னம்பிக்கை தந்திருக்கின்றன!

வாழ்க்கை என்றால் இதுதான் என்பதைப் புரியவைத்திருக்கின்றன!

விட்டுக்கொடுக்க வைத்திருக்கின்றன!

சிரிக்க வைத்திருக்கின்றன!

சிந்திக்க வைத்திருக்கின்றன!

இன்னும்.. இன்னும்... சொல்லிக்கொண்டே..... போகலாம்.

தமிழ் உறவுகளே நீங்கள் விரும்பியோ.. 
சூழல் காரணமாகவோ தமிழ் இலக்கியங்கள் படித்திருப்பீர்கள்..

தமிழ் இலக்கியப் பரப்பில் உங்களுக்குப் பிடித்த இலக்கியம் எது? ஏன் என்று தெரிந்து கொள்ளவே இந்த இலக்கிய மேடை..
கலந்துரையாடத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.