Latest News



அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இலக்கை இயம்புவன இலக்கியங்கள்!

இலக்கியங்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச்சென்ற விலைமதிப்பிடமுடியாத சொத்து!

இலக்கியங்கள் அனுபவக் குவியல்கள்!

இலக்கியங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளன!

“கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்“ என்று ஒரு முதுமொழி உண்டு.
கண்ணில் காணும் நூல்களையெல்லாம் கற்றவன் பண்டிதனாவன் என்பதல்ல இதன் பொருள்.

“நல்ல நூல்களைக் கண்டு, அதைக் கற்றவனே பண்டிதனாவான்“
என்பது இதன் பொருளாகும்.

தமிழ் இலக்கியப்பரப்பில் சங்ககாலம் தொடங்கி இன்றைய காலம் வரை நிறைய இலக்கியங்கள் உண்டு.

நாள்தோறும் தமிழ் இலக்கியங்களுடனேயே உறவாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே நான் பெற்ற பெரும் செல்வம் என்ற பெருமிதம் எனக்கு என்றுமே உண்டு.

வாழ்வில் வெற்றிபெற்ற பலரும்
வாழ்வில் உயர்ந்தவர்களையோ
உயர்ந்த இலக்கியங்களையோ தம் வாழ்வின் முன் மாதிரியாகக் கொண்டமை நாம் உற்றுநோக்கவேண்டியதாக அமைகிறது.

எனக்குத் தெரிந்து..
திருக்குறள்
சிலம்பு
கம்பராமாணம்
ஆகிய தமிழ் இலக்கியச் செல்வங்கள் தரும் கொள்கைகளைத் தம் வாழ்வின் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டவர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன்.

எனக்குப் பிடித்த இலக்கியம்..

எந்தப் பொருள் குறித்தும் வள்ளுவர் பேசியிருக்கிறாரே..
அதுவும் இவ்வளவு சுருக்கமாக..

என்று திருக்குறளைப் போன்ற ஒரு இலக்கியமே எங்கும் கிடையாது என்ற எண்ணம் எனக்கு சங்கஇலக்கியம் படிக்கும் முன்பாக இருந்தது.
சங்க இலக்கியம் படித்த பின்னர் திருக்குறளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது சங்க இலக்கியம் என்பதை உணர்ந்தேன்.
என் வேர்களைத்தேடி என்னும்வலைப்பக்கத்தில் சங்கஇலக்கியத்தையே அதிகமாக எழுதிவருகிறேன்.

எழுதி வருகிறேன் என்று சொல்வதைவிட
கற்றுவருகிறேன்...
சுவைத்துவருகிறேன்..
போற்றி வருகிறேன் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

என் வாழ்வின் இன்பத்தின் போதும், துன்பத்தின் போதும்
திருக்குறளும், சங்க இலக்கியமும் என்னோடு துணை வந்திருக்கின்றன.

அருகே வந்து தன்னம்பிக்கை தந்திருக்கின்றன!

வாழ்க்கை என்றால் இதுதான் என்பதைப் புரியவைத்திருக்கின்றன!

விட்டுக்கொடுக்க வைத்திருக்கின்றன!

சிரிக்க வைத்திருக்கின்றன!

சிந்திக்க வைத்திருக்கின்றன!

இன்னும்.. இன்னும்... சொல்லிக்கொண்டே..... போகலாம்.

தமிழ் உறவுகளே நீங்கள் விரும்பியோ.. 
சூழல் காரணமாகவோ தமிழ் இலக்கியங்கள் படித்திருப்பீர்கள்..

தமிழ் இலக்கியப் பரப்பில் உங்களுக்குப் பிடித்த இலக்கியம் எது? ஏன் என்று தெரிந்து கொள்ளவே இந்த இலக்கிய மேடை..
கலந்துரையாடத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.


கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்று தன் வேலைக்காரி என்னும் நாடகத்தின் வாயிலாக அறிவுறுத்தியவர் அறிஞர் அண்ணா ஆவார்.

கத்தியை தீட்டும் நுட்பம் எல்லோருக்கும் தெரியும்!
புத்தியைத் தீட்டும் நுட்பம் தான் பலருக்குத் தெரிவதில்லை!

கத்தி வன்பொருள் கண்ணால் காணமுடியும், கையால் தொடமுடியும் அதனால் அதனைத் தீட்டுவது மிகவும் எளிதாகிறது.
புத்தி மென்பொருள் கண்ணால் காணமுடியாது, கையால் தொடமுடியாது
அதனால் அதனைத் தீட்டுவது அரிதாகிறது.

புத்தன், இயேசு, காந்தி இவர்கள் புத்திசாலிகளா? உணர்வுகளைக் கையாளத் தெரிந்தவர்களா?
உணர்வுகளைப் புத்தியோடு கையாளத் தெரிந்தவர்கள் என்பதே சரியான பதிலாக இருக்கமுடியும். ஆம்!

உணர்வு! அறிவு!
என்னும் இரண்டில் நாம் எதனுடைய பேச்சைக் கேட்கிறோம்? எவ்வளவு கேட்கிறோம்? என்பதில் தான் நாம் புத்திசாலிகளா? முட்டாள்களா? சராசரி மனிதர்களா? என்ற பதிலும் அடங்கியிருக்கிறது.

அறிவெனப்படுவது யாது? என்னும் கேள்விக்கு வலைநண்பர்கள் பலரும் பல்வேறுவிதமான பதிலளித்து சிந்திக்கச் செய்தனர்

அறிவு, புத்தி, ஞானம், விவேகம், மதிநுட்பம் என பல சொற்களால் அழைக்கப்பட்டாலும் இவற்றின் பொருள் “சிந்தனை“ என்ற ஒன்றுதான்!

புத்தியை எப்படித் தீட்டலாம்??

கல்விச்சாலைகள்!
புத்தகங்கள்!
அனுபவங்கள்!
சூழல்கள்!
புரிதல்கள்!
சிந்தனைகள்!
என நாம் நம் புத்தியைத் தீட்டிக் கொள்ள எத்தனையோ கருவிகள் உள்ளன.
நான் என் புத்தியைத் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்திய கருவிகளை வரிசைப்படுத்துகிறேன்.
  
   சங்க இலக்கியம்
திருக்குறள்
    புத்தகங்கள்
    அனுபவங்கள்
       சிந்தனைகள்
       நண்பர்கள்
 கல்விச் சாலைகள்
    மாணவர்கள்
       குழந்தைகள்
   உறவுகள்
இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
என்னை நீண்டகாலம் அசைபோடச் செய்த  சிந்தனைகள் சில..
       
  •  மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!       


  • பித்தனின் பேச்சிலும் சித்தனின் கேள்விக்குப் பதில் இருக்கும்!       


  • நன்றாகப் படிப்பவன் புத்தகத்தோடு இருப்பான்! நன்றாகப் படித்தவன் புத்தகத்தில் இருப்பான். 


  • "பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும்" 



தமிழ் உறவுகளே..
எனது புத்தியைத் தீட்டிக் கொள்ள நான் பயன்படுத்தி வரும் கருவிகளைப் பட்டியலிட்டிருக்கிறேன்..
இதுபோல நீங்கள் உங்கள் புத்தியைத் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்திவரும் கருவிகளை வரிசைப்படுத்தவே இந்த இடுகையைக் களமாக்கியுள்ளேன்..
புத்தியைத் தீட்டலாம் வாங்க....


கல்வி அறிவு
கேள்வி அறிவு
அனுபவ அறிவு
தன்னறிவு
சொல்லறிவு
இயற்கை அறிவு
நுண்ணறிவு
ஆழ்மன அறிவு
பல்துறை அறிவு

என அறிவு பல வகைப்பட்டதாக ஒவ்வொரு துறைசார்ந்தும் பாகுபடுத்தப்படுகிறது.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!

என்றொரு திரைப்படப்பாடல் கூட வந்திருக்கிறது.


அன்பான தமிழ் உறவுகளே.....

அறிவெனப்படுவது யாது?
எத்தகைய அறிவு உங்களுக்கு உள்ளது?

வெற்றி பெற்ற மனிதர்களிடம் மிகுந்திருப்பது
அறிவா? உணர்வா?
  
நீங்கள் அறிவு சொல்வதைக் கேட்கிறீர்களா?
உணர்வு சொல்வதைக் கேட்கிறீர்களா?


என அறிவு குறித்த பகிர்வுக்கான களமாக இதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

தொடர்புடைய இடுகை தங்கள் பார்வைக்காக




தமிழின், தமிழரின் பண்பாட்டு வேர்களைத்தேடி வந்த தமிழ் உறவுகளே...

வணக்கம்..

தமிழ்க்காற்று என்னும் இவ்வலைப்பக்கம் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு குறி்த்த கல்விப் புலம் சார்ந்த வலைப்பதிவர்களை அடையாளப்படுத்த விரும்புகிறது.

தமிழ்மணம், இன்லி, தமிழ்வெளி என எண்ணற்ற திரட்டிகள் இருந்தாலும்....

எந்தத் திரட்டிகளிலுமே கல்விப்புலம் சார்ந்த பதிவுகளுக்கோ, இலக்கியம் சார்ந்த பதிவுகளுக்கோ “.இலக்கியம்“ என்னும் பிரிவு கூடப் பாகுபடுத்தப்படவில்லை..

அதனால் நானறிந்த கல்விப்புலம் சார்ந்த, இலக்கியத்துறை சார்ந்து எழுதக்கூடிய பதிவர்களை இங்கு திரட்ட விரும்புகிறேன்...

நீங்கள்....

ஆசிரியர் பணி செய்துகொண்டே வலைப்பதிவு எழுதுபவரா?
விரிவுரையாளராக இருந்துகொண்டே வலைப்பதிவில் எழுதுபவரா?
கல்விப்பணியில் ஓய்வுபெற்ற பதிவரா?
இலக்கியம் சார்ந்து வலைப்பதிவில் எழுதுபவரா?
தமிழ் மொழியின், தமிழரின் பண்பாடுகள் குறித்து எழுதுபவரா?

ஆம் எனில் தங்கள் வலைப்பதிவு முகவரியையும் பதிவின் கருப்பொருளையும்  கருத்துரையில் தெரிவியுங்கள் உறவுகளே..

நான் இலக்கியக் காற்று வாங்கச் செல்லும் சில வலைப்பதிவுகளை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்..

நீங்கள் அறிந்த பதிவுகளைக் கூட அறிமுகம் செய்யலாமே...

(இந்த வலைப்பக்கத்தில் தினம் ஒரு இலக்கியம், வாழ்வியல் குறித்த சிந்தனைக்கான களத்தை உருவாக்க எண்ணியுள்ளேன்.  கலந்துகொள்ள அன்புடன் உங்களையும் அழைக்கிறேன்)